ஜெயப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் நகராட்சி கமிஷனர் அசோக் ஜெயின் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கமல் ஹரிஜன், ரித்திஷ் ஹரிஜன், மனிஷ் ஹரிஜன் உள்ளிட்ட சிலர் பகவாசா கச்சி பஸ்தி பகுதியில் ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் நேற்று காலை 6.30 மணிக்கு ஆய்வு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

அப்போது நகராட்சி ஊழியர்கள் திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்திய பெண்களை புகைப்படம் எ டுத்ததாக கூறப்படுகிறது. இதை அதே பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஜாபர் கான் (வயது 55) என்பவர் தடுத்துள்ளார். இதனால் நகராட்சி ஊழியர்களுக்கு ஜாபர்கானுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் குச்சியால் அடித்தும், கால்களால் உதைத்ததாலும் ஜாபர்கான் இறந்துள்ளார்.

இது குறித்து அவரது சகோதரர் நூர்முகமது போலீசில் புகார் செய்தார். போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக யாரும் இது வரை கைது செய்யப்படவில்லை. பிரதாப்கார் மாவட்ட எஸ்.பி சிவ்ராஜ் மீனா கூறுகையில்,‘‘ 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

போலீசார் ஜாபர்கான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நகராட்சி கமிஷனர் அருண் ஜெயின் கூறுகையில், ‘‘அரசின் ஸ்வச்சி பாரத் அபியான் திட்டத்தின் கீழ் அதிகாலை நேரங்களில் ஆய்வு பணிகளை மேற்கொள்வது வழ க்கம். அப்போது திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பவர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

அதேபோல் தான் நேற்று எங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டிரு ந்தோம். அப்போது ஒருவர் எங்களிடம் வந்து தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, ஊழியர்களையும் தாக்கினார். அதன் பின்னர் அந்த நபர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

எங்களது ஊழியர்கள் பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஜாபர்கான் மீது போலீசில் புகார் செய்தனர். அப்போது தான் ஜாபர் கான் இறந்தது தெரியவந்தது. அவர் நல்ல படியாக தான் வீட்டிற்கு சென்றார். நாங்களும் எங்களது பிரச்சாரத்தை தொடர்ந்தோம். நாங்கள் எதையும் புகைப்படம் எடுக்கவில்லை. அவரை அடிக்கவும் இல்லை. எங்களிடம் இருந்து செல்லும் போது அவர் நன்றாக தான் இருந்தார்’’ என்றார்.

இந்த பிரச்னையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கையில் எடுத்துள்ளது. திறந்தவெளியில் பெண்கள் இயற்கை உபாதை கழிப்பதை புகைப்படம் எடுக்கும் நடைமுறையை ஜாபர்கான் தொடர்ந்து எதிர்த்து வ ந்துள்ளார்.

இது தொடர்பாக அவரே நேரடியாக எழுத்துப்பூர்வ புகார் கடிதத்தை ஏற்கனவே எழுதியுள்ளார்.
திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தும் பெண்களை போட்டோ எடுப்பது அசிங்கமான செயல். இது பெண்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்று ஜாபர்கான் ஏற்கனவே போராடியுள்ளார்.

அதனால் புகாரில் தெரிவித்துள்ள நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட ஊழியர்களை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.