ஜெய்ப்பூர்
நேற்று மாலை 5 ,மணியுடன் ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது.
இந்த மாதம் மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலச் சட்டசபை தேர்தல்கள் நடைபெறுகிறது.ஏற்கனவே மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களுக்குத் தேர்தல் முடிவடைந்துள்ளது.
மீதமுள்ள ராஜஸ்தானில் நாளையும் (சனிக்கிழமை), தெலுங்கானாவில் வருகிற 30-ந் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது. ராஜஸ்தானில் ஆட்சியை தக்கவைக்க ஆளும் காங்கிரசும், அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு பா.ஜனதாவும் தீவிரமாக மல்லுக்கட்டி வருகின்றன.
பாஜக சார்பில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் என கட்சியின் முன்னணி தலைவர்கள் மாநிலத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ராஜஸ்தான் தேர்தலில் தங்கள் வெற்றிக்கணக்கை தொடங்க திட்டமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வந்தன.
கடந்த சில வாரங்களாகச் சூறாவளியாக நடந்த இந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. ராஜஸ்தான் மாநிலத்தின் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 இடங்களுக்கு நாளை ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.
இதில் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தின் கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியின் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.