ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு அச்சம்  காரணமாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் குஜராத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.  இம்மாநிலத்தின் துணை முதல்வராகப் பதவி வைகித்ட சச்சின் பைலட் திடீரென அம்மாநில முதல்வர் அசோக் கெலாத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்.  சச்சினுக்கு சுமார் 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சட்டப்பேரவையில் அசோக் கெலாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை இழந்ததாகக் கூறப்பட்டதையொட்டி ஆளுநர் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குக் கோர உத்தரவிட்டார்.  இதையொட்டி தங்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் காங்கிரசிடம் விலை போகலாம் என பாஜகவுக்கு அச்சம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் குஜராத் மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   இவர்கள் அனைவரும் போர்ப்பந்தர் நகரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  இதை ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் பூனியா மறுத்துள்ளார்.

இது குறித்து, “ஏற்கனவே பல மாநிலங்களில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை பாஜக தனது பக்கம் இழுத்து ஆட்சியைக் கலைத்தது.  தற்போது காங்கிரஸிடம் இருந்து தனது சட்டப்பேரவை உறுப்பினர்களைக் காக்க பாஜக இடம் மாற்றி உள்ளது.” என அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.