லைப் பொக்கிஷமான சிலைகள்… கொள்ளை போய் ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல.. ஐந்து மாமாங்கம் ஆன பிறகு… மீண்டும் தனக்குரிய இடத்துக்கு வருகின்றன என்றால் எவ்வளவு மகிழ்ச்சி!

கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்!

உலகப் புழக் பெற்ற தஞ்சைப் பெரியகோயிலில்  பலநூறு ஆண்டுகள் பழைமையான மாமன்னன் ராஜராஜ சோழன் – உலகமாதேவியின் உலோகச் சிலைகள் இருந்தன. இவை கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போயின.

இந்தச் சிலைகள், குஜராத்தில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருப்பதாக ஒரு தகவல் உலா வந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க  இந்தச் சிலைகளை மீட்டுக் கொண்டுவந்து, மீண்டும் பெரியகோயிலில் வைக்க வேண்டும் என்ற தஞ்சை மக்களின் நீண்டகால கோரிக்கை.

ஆனால் இது நிறைவேறாமலேயே இருந்தது.

இந்த நிலையில்  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு, இந்தச் சிலைகளை மீட்டுள்ளது.

களவானதில் ராஜராஜ சோழன் சிலை 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ளது.  இதன் உயரம், இரண்டரை அடி.

உலகமாதேவி சிலை 50 கோடி ரூபாய்க்கும் மேல் விலை மதிப்புகொண்டது.

இந்த சிலைகளை மீட்க ஏற்கெனவே (பெரியகோயில், ஆயிரமாவது ஆண்டின்போது) அப்போதைய தி.மு.க அரசு முயற்சித்தது. ஆனால் முயற்சி வெற்றியடையவில்லை.

பொன் மாணிக்கவேல்

இந்நிலையில்தான், இந்தச் சிலைகள் காணாமல்போனது குறித்து ஐ.ஜி.,பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டது. இதையடுத்து கடந்த மே 28-ம் தேதி ஐ.ஜி.,பொன்.மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ராஜாராமன், அசோக் நடராஜன், ஆய்வாளர்கள் ரவி, விநாயகமூர்த்தி, சுரேஷ்குமார், சிபின்ராஜமோகன், காவலர்கள் செழியன், சாமியப்பன் ஆகியோர் கொண்ட குழு குஜராத் கௌதம் சாராபாய் காலிகோ மீயூசியத்தில் புலன் விசாரணை மேற்கொண்டது.

அங்குள்ள சிலைகள்,  தஞ்சைப் பெரியகோயிலிலிருந்து திருடப்பட்டவைதான் என்பதை ஆதாரங்களுடன்  உறுதிசெய்தது.

இதுகுறித்து இந்த குழுவில் உள்ளவர்கள் தெரிவித்ததாவது:

“இது எங்களுக்கு மிகவும் சவாலான வழக்காகவே இருந்தது. சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன் களவுபோனவை. ஆகவே இந்தச் சிலைகளை தஞ்சைப் பெரியகோயிலில் நேரில் பார்த்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்தோம். அவர்கள் அனைவருமே வயது முதிர்ந்தவர்கள். அவர்கள் சொன்ன தகவல்கள் எங்களுக்கு பல வகைகளிலும் உதவியாக இருந்தன.

60 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் இருந்த நிர்வாகிகளால் திருடப்பட்டது. பிறகு தஞ்சாவூர் கபிஸ்தலம் அருகே உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரியார் மூலமாக சாராபாய் அருங்காட்சியகத்திடம் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. மிகவும் போராடி இந்த சிலைகளை மீட்டிருக்கிறோம்.

மீட்கப்பட்ட இந்தச் சிலைகள், ரயில்மூலம் மே 31-ம் தேதி சென்னை கொண்டுவரப்படும்” என்றார்கள்.

அதன் பிறகு இந்த சிலைகள் ஏற்கெனவே தஞ்சை பெரிய கோயிலில் இருந்த இடத்தில் வைக்கப்படும் என்கிறார்கள் தகவல் தெரிந்தவர்கள்.

தஞ்சை மக்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய செய்தி இது.