தஞ்சாவூர்: ராஜராஜ சோழனின் 1036வது சதயவிழா தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
சோழர்காலக் கட்டிடக்கலையின் புதுவித அமைப்பாக மாமன்னன் ராஜராஜன் 1003-ம் ஆண்டுக்கும் 1010-ம் ஆண்டுக்கும் இடையே எழுப்பிய கோயில் தஞ்சை பிரகதீசுவரர் கோவில். பிரசித்திப்பெற்ற இக்கோவில், கட்டிடக்கலைக்கு சான்றாக திகழ்கிறது. இக்கோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும்.
நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வது பிறந்தநாளை (சதய விழா) அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் சிறப்பாக கொண்டாடப்பட்டது
தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி 1000 நோட்டை வெளி யிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது. மத்திய அரசு 1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது. 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.
தஞ்சாவூரில் கம்பீரமாக வீற்றிருக்கும் தஞ்சை பெரிய கோவிலை கட்டி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான, ஐப்பசி சதய நட்சத்திரம் அன்று சதய விழாவாக ஆண்டுதோறும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது .
அந்த வகையில் இந்த ஆண்டு 1036 வது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் 2 நாட்கள் நடைபெறும் சதயவிழா தேவாரப் பாடல்கள், பாடி பூஜைகள் செய்யப்பட்டு , திருமுறை வீதியுலா ,கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் , சிறப்பு சொற் பொழிவுகள் என வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஒரு நாள் மட்டுமே நடத்தப்படுகிறது.
மாமன்னர் ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில் ராஜராஜ சோழனின் 1036வது ஆண்டு சதயவிழா இன்று மங்கல இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. தஞ்சை பெரிய கோவில் வெளியே உள்ள ராஜராஜ சோழனின் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செய்தார்.