ராஜமாதங்கி கோயில், சேலம் மாவட்டம் மன்னார் பாளையத்தில் அமைந்துள்ளது.
கையில் வீணையுடன், இருபுறமும் சிவந்த அலகுகளுடன பச்சைக்கிளிகள் சிம்மாசனமாய் கருவறையின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல் எழிலாய் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் அம்மன் ராஜமாதங்கி. அன்னை பராசக்தியின் மந்திரியாக இருக்கும் அவள் அறிவு வடிவமல்லவா?
ராஜ மாதங்கி பக்தர்களின் குறை தீர்த்து சகல நலனும் செல்வமும் உண்டாகச் செய்ய வேண்டி கருணை ததும்பும் முகத்துடன் அவதரித்த கலாதேவி. மூன்று சக்திகளும் ஒருங்கே உருப்பெற்றவள்.
சேலம் ஸ்ரீராஜ மாதங்கி அறக்கட்டளையினர், சேலம் மாநகர மன்னார் பாளையத்தில்,
இயற்கை எழில் கொஞ்சும் பசுமை நிறைந்த சுற்றுச்சூழலில் அருமையாக அருள்மிகு ராஜ மாதங்கி ஆலயம் அமைத்துள்ளனர்.
ஸ்ரீசக்கர மகா மேரு ஸ்ரீசக்கரத்தின் முப்பரிமாண வடிவமாகும். திருவண்ணாமலை பறவைப் பார்வையில் ஸ்ரீசக்கரவடிவில் தோன்றுவதால் அதற்கு ஸ்ரீசக்கரபுரி என்றும் பெயருண்டு.
பவுர்ணமி தினங்களில் ஸ்ரீசக்கரத்திற்கே நவாவர்ணபூஜையும் அபிஷேகமும் குங்கும அர்ச்சனையும் உண்டு.
குழந்தைகளின் கல்வி சிறக்கவும், மேல் படிப்பிற்கும் ஹோமங்கள் செய்கிறார்கள்.
சுற்றிலும் மலைகளாலும் பச்சை வயல்களாலும் சூழப்பட்டுள்ள ஆலயத்தைச் சுற்றி நந்தவனம் அழகுறப் பராமரிக்கப்படுகிறது.