சென்னை
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தமிழக சுகாதாரத்துறையின் கீழ் மாற்றப்பட்டும் மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது.
தமிழக அரசு நடத்தி வரும் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.13,170 கட்டணமும் பல் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.11,170 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தமிழக அரசின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. ஆயினும் அதன் நிர்வாகம் தமிழக சுகாதாரத்துறையின் கீழ் முழுமையாக வரவில்லை.
இங்கு பணி புரியும் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களின் ஊதியத்தை தமிழக அரசு அளித்து வந்தது. ஆனால் கல்லூரி கட்டணம், குறைக்கப்படாமல் தனியார் கல்லூரிகளுக்கு இணையாக வசூல் செய்யப்பட்டது. இது குறித்து அனைத்து கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த போதிலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த மாணவர் சேர்க்கையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்தது. இதையொட்டி கடந்த 51 நாட்களாக மாணவர்கள் இது குறித்துத் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டத்தின் விளைவாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை முழுமையாகத் தமிழக சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வருவதாக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. எனவே இனி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ள 113.21 ஏக்கர் நிலம் மாணவர் விடுதி, ஆசிரியர் குடியிருப்புக்கள் உள்ளிட்ட அனைத்தும் சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால் மாணவர் அமைப்பு இந்த அரசாணையில் திருப்தி இல்லை என அறிவித்துள்ளது. இந்த அரசாணையில் மருத்துவக் கல்லூரிக் கட்டணக்குறைப்பு பற்ரி எவ்வித உத்திரவாதமும் இல்லை என்பதால் அந்த உத்தரவாதத்தை அரசு அளிக்கும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாகவும் மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது.