டெல்லி: இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், மூதறிஞருமான  ராஜாஜியின் கொள்ளுப் பேரன் சி.ஆர்.கேசவன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு  அனுப்பியுள்ள கடிதத்தில்,  “நான் 2001ல் வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்ததற்குக் காரணம் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமே.  இந்தியாவில், அனைவரையும் உள்லடக்கிய தேசிய மறுமலர்ச்சியைக் காண வந்தேன். அத்தகைய கொள்கையின் மீது ஈர்ப்பு கொண்டே வந்தேன். ஆனால், அது நிகழவில்லை.

கடந்த 20 ஆண்டுகளாககாங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றி வருகிறேன். ஆனால், கட்சியின், எந்தவித மதிப்புமிகு அடையாளத்தையும் நான் உணரவில்லை. அதனால் இனியும் என்னால் கட்சியுடன் இணைந்து செயல்பட முடியாது என்று தோன்றுகிறது.

இப்போது கட்சி இருக்கும் நிலைமை ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. அதனாலேயே தான் நான் தேசிய அளவில் எந்தப் பொறுப்பையும் சமீப காலமாக ஏற்க விரும்பவில்லை. அதுபோல, ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையிலும் பங்கேற்கவில்லை.

“2001ல் நான் காங்கிரஸில் இணைந்த போது நிறைய சவால்கள் இருந்தன, நிறைய பணிகள் இருந்தன. நான் ஸ்ரீபெரும்புதூர் இளைஞர் நலனுக்கான ராஜீவ்காந்தி தேசிய மையத்தின் துணைத் தலைவராக, பிரச்சார் பாரதி உறுப்பினராக இருந்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சி அளித்த வாய்ப்புகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜினாமாவை தொடர்ந்து கேசவன் வேறுகட்சியில் சேர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,   “நான் இதுவரை வேறு எந்தக் கட்சியினருடனும் பேசவில்லை. நேர்மையாகவே அடுத்து என்ன காத்திருக்கிறது என்றுகூட எனக்குத் தெரியாது” என்று கூறியுள்ளார்.