ராலேகான் சித்தி
அன்னா ஹசாரே உயிருடன் இருப்பதைப் பற்றியோ இருப்பதைப் பற்றியோ பாஜக சிறிதும் எண்ணவில்லை என ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் அவர் சொந்த ஊரான ராலேகான் சித்தியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்றும் 7 ஆம் நாளாக அவர் உண்ணாவிரதம் தொடர்கிறது. அவர் மத்தியில் லோக்பால் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை தொடங்கக் கோரி நடத்தும் உண்ணாவிரத போராட்டத்துக்கு பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது.
நேற்று அன்னா ஹசாரே வின் உடல் நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அவர்கள், “அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தினால் 4.25 கிலோ எடை குறைந்துள்ளார். அது மட்டுமின்றி அவருடைய இரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. மற்றபடி அவர் ஓரளவு ஆரோக்கியமாக இருக்கிறார்.” என தெரிவித்தனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனை கட்சி தலைவர் ராஜ் தாக்கரே நேற்று அன்னா ஹசாரேவை சந்தித்தார். அவர் அன்னா ஹசாரே விடம் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன் பிறகு ராஜ் தாக்கரே அங்கிருந்த மக்களிடம், “பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார். அவரைப் போன்ற பயனற்ற மக்களுக்காக உங்கள் உயிரை விட வேண்டாம் என நான் ஹசாரேவிடம் வலியுறுத்தி உள்ளேன்.
அன்னா ஹசாரே உயிருடன் இருக்க வேண்டும் என பாஜக எண்ணவில்லை என எனக்கு தோன்றுகிறது. அவர் உயிருடன் இருப்பதை பற்றியோ இறப்பதைப் பற்றியோ அக்கட்சிக்கு கவலை இல்லை. அதனால் பாஜகவையோ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளையோ நம்ப வேண்டாம் என நான் தெரிவித்துள்ளேன்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பிரதமர் மோடி லோக்பால் அமைப்புக்கு ஆதரவாக கட்டுரைகள் எழுதி இருந்தார். தற்போது ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகியும் லோக்பால் அமைக்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தினால் தான் பாஜகவும் ஆம் ஆத்மியும் ஆட்சியை பிடித்தன. இதை அக்கட்சிகள் மறந்து விட்டன” என தெரிவித்தார்.