மும்பை
ராஜிவ் காந்தியை குறித்து தவறாக பேசிய பிரதமர் மோடியை நாடு மன்னிக்காது என மகாராஷ்டிர நவநிர்மாண் சமிதி கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் பிரசாரங்கள் மிகவும் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பிரசாரக் கூட்டத்தில் தனி மனித தாக்குதல்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பாஜகவினர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவர் தாயும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி ஆகியோரை மிகவும் தவறாக பேசி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த ஒரு தேர்தல் கூட்டத்தில் பிரதமர் மோடி, ”தங்களை குற்றமற்றவர் என காட்டிக் கொள்ள ராகுல் காந்தி என் மீது பல குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். மறைந்த ராஜிவ் காந்தியை குற்றமற்றவர் என காங்கிரசார் கூறி வந்தனர். ஆனால் அவர் ஒன்றாம் நம்பர் ஊழல் பேர்வழியாக மரணம் அடைந்தார்” என பேசி உள்ளார்.
இது எதிர்க்கட்சிகள் இடையே சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. மகாராஷ்டிர நவ நிர்மாண் சமிதி கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போதைய மக்களவை தேர்தலில் அவர் கட்சி போட்டியிடவில்லை எனினும் அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
ராஜ் தாக்கரே தனது டிவிட்டரில், ”நரேந்திர மோடியின் அரசியல் வாழ்க்கையில் வெறுப்பு உணர்ச்சி, முடிவில்லா பொய்கள், பொது வாழ்க்கையில் உள்ளோரை கேவலம் செய்தல் ஆகிய மூன்றும் நீக்கமற நிறைந்துள்ளன. மறைந்த ராஜிவ் காந்தி குறித்த அவருடைய சமீபத்திய விமர்சனம் இதை உறுதி செய்துள்ளது. மோடியின் இந்த பேச்சுக்கு நாடு அவரை மன்னிக்காது” என பதிந்துள்ளார்.