தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ரைஸா.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், சமீபத்தில் ஃபேசியல் செய்ய பார்லர் சென்றதாகவும் ,சில ஒப்பனை செயல்முறைகளை அழகுக்கலை மருத்துவர் செய்ததால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் அவர் தன்னை சந்திக்கவும் பேசவும் மறுப்பதாகவும் அவரது உதவியாளர்களிடம் கேட்டபோது வெளியூர் சென்றுவிட்டதாக கூறுவதாகவும் ரைஸா குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் பைரவி செந்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் : “முகத்தில் உள்ள செல்களை புத்துயிர் பெற வைக்கும் சிகிச்சை முறைதான் அவர் மேற்கொண்டார். இந்த சிகிச்சை எடுத்தால் சிறிய அளவிலான பக்கவிளைவுகள் ஏற்படும் என்று ரைஸாவிடம் எழுதி ஒப்புதல் வாங்கினோம். அது அவருக்கும் நன்றாக தெரியும். இதே சிகிச்சையை ரைஸா பலமுறை செய்திருக்கிறார். அப்போது எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

கடைசியாக கடந்த 16-ம் தேதி சிகிச்சை எடுத்துக் கொண்ட போது லேசான பக்கவிளைவு ஏற்பட்டிருக்கிறது. சரியான முறையில் மருத்துவ அறிவுரைகளை பின்பற்றாததால் அவருக்கு முகம் வீங்கியிருக்கலாம்.

அவரது போட்டோவை பதிவிட்டு எங்கள் மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தியிருக்கிறார். ரைஸாவின் குற்றச்சாட்டால் எங்கள் மருத்துவமனையின் பெயர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவர் மீது வழக்கு தொடுப்போம். ரைஸா மன்னிப்பு கேட்டு இழப்புக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புக்கு முழு பொறுப்பும் ரைஸா தான் என கூறியுள்ளார் .

https://www.instagram.com/p/CN4_w9LjrHF/

இந்நிலையில் ரைசா வில்சன் தரப்பு வழக்கறிஞர் ஜி. ஹரிஹர அருண் சோமசங்கர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மருத்துவர் பைரவி செந்திலின் உத்தரவாதத்தின் அடிப்படையில் மார்ச் 25ஆம் தேதி மருத்துவர் வனிதா மற்றும் மணியிடம்
போடாக்ஸ் சிகிச்சையை ரைசா எடுத்துக்கொண்டு, அதற்கு கட்டணமாக 62,500 ரூபாய் செலுத்தியுள்ளார் .

பத்து நாட்களுக்கு பிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் மருத்துவர் பைரவி செந்தில் டெர்மா பில்லர்ஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கபட்டதாகவும், ஏப்ரல் 16ஆம் தேதி ஆலோசனைக்கு பிறகு ஏப்ரல் 17ஆம் தேதியே டியர் ஃப்ரீ ஃபில்லர் சிகிச்சையை மருத்துவர் பைரவி செந்திலே அளித்ததுடன், அதற்காக 65 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தியுள்ளார்.

சிகிச்சைக்கு பின்னர் ரைசாவின் வலது கண் மற்றும் கன்னத்திலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், முகமும் வீங்கியதாகவும், இதற்கு மருத்துவர் பைரவி செந்தில் அளித்த தவறான சிகிச்சையே என ரைசா குற்றம்சாட்டி உள்ளார் .

ரைசா கேட்ட சிறிய அளவிலான சிகிச்சைக்கு மாறாக வலுக்கட்டாயமாக வேறு சிகிச்சை அளித்ததால்தான் தனது முகம் பாதிப்புக்கு உள்ளானதாக மருத்துவர் பைரவியிடம் விளக்கம் பெற ரைசா முயன்றும், சந்திக்க மறுத்துவிட்டதாகவும் நோட்டீசில் சுட்டிக்காட்டியுள்ளார்.

15 நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகையை கொடுக்காவிட்டால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் மூலம் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற வேண்டியிருக்கும் என மருத்துவர் பைரவி செந்திலை வழக்கறிஞர் ஜி.ஹரிஹர அருண் சோமசங்கர் அனுப்பிய நோட்டீசில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.