போபால்:
பெண் குழந்தைகளுக்கு அங்கீரிக்கப்பட்ட 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் நிச்சயம் செய்தால் லவ் ஜிகாத் எனப்படும் காதல் திருமணங்கள் முடிவுக்கு வரும் என்று மத்திய பிரதேச பாரதியஜனதா எம்எல்ஏ கோபால் பார்மர் தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் வேளையில் பாஜக எம்எல்ஏவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாரதியஜனதா கட்சி எம்எல்ஏவான கோபல் பார்மர், திருமண வயது ‘18’ என்று அமல்படுத்தியதுதான் காதல் நோய் வர காரணம் என்றும், இதன் காரணமாகவே காதல் நோய் வந்து பெண்கள் ஆண்களை காதலித்து ஓடுவதற்கு காரணமாகி விட்டது என்றார்.
மேலும் இந்த காரணத்தினாலேயே முஸ்லிம் ஆண்கள் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களை ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் காதலித்து இஸ்லாம் மதத்துக்கு மாற்று கின்றனர்” என்றும் குற்றம் சாட்டிய கோபால், லவ் ஜிகாத்நடவடிக்கைகளைத் தடுக்க பெண்களுக்குச் சிறு வயதிலேயே திருமணத்தை நிச்சயிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஏற்கனவே நம் முன்னோர்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டதால்தான், அவர்களின் திருமணம் வாழ்க்கை இறுதி வரை நீடித்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே நாடு முழுவதும் குழந்தை திருமணத்தைத் தடுக்க வேண்டும் என்று அரசும் சமூக அமைப்புகளும் குரல் கொடுத்து வரும் வேளையில், மத்தியப் பிரதேசத்தின் ஆக்ரா மால்வா தொகுதி எம்எல்ஏ-வான கோபால் பார்மர், “சிறு வயதிலேயே திருமண நிச்சயம் செய்வதன் மூலம், பெண்கள் தவறான வழியில் செல்வதை தடுக்கலாம்” என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.