சென்னை: சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள பணிகள் 3வது ஆண்டாக தொடர்ந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.
சாதாரண மழைக்கே தத்தளிக்கும் சென்னையில், 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மழைநீர் வடிகால் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டு 3வது ஆண்டாக தொடர்ந்து வருகிறது. இதுவரை, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2,325 கோடி மதிப்பீட்டில் 738.22 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வட சென்னை பகுதியின் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) நிதியின் கீழ் 769 கி.மீ. நீளத்துக்கு ரூ. 3,220 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில். இதுவரை 483.83 கி.மீ நீளத்துக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன.
தென்சென்னை பகுதியின் கோவளம் வடிநிலத்தில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு KfW என்ற ஜெர்மன் நாட்டு வங்கி நிதியில் ரூ.1,714 கோடி மதிப்பீட்டில் M1, M2 மற்றும் M3 மூன்று கூறுகளாக மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டது. இரண்டு கட்டங்களாக, எம்1 தொகுப்புத் திட்டத்தில் 160.83 கி.மீ. நீளத்துக்கு ரூ.597.48 கோடி மதிப்பீட்டில் 12 சிப்பங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதுவரை 21.82 கி.மீ நீளத்துக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன.
2023-ம் ஆண்டின் பருவமழையை எதிர்கொள்ள 15 மண்டலங்களில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை தூர்வரும் பணி மற்றும் சிறு பழுதுபார்க்கும் பணிகள் ரூ.27.55 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பலமுறை நேரில் ஆய்வு செய்த நிலையில், இன்று மீண்டும் ஆய்வு செய்ய உள்ளார். அதன்படி, பாடி, திரு.வி.க.நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார். மேலும், பெரம்பூரில் தணிக்காச்சலம் கால்வாயை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். அத்துடன் திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளையும் முதல்வர் ஆய்வு செய்கிறார்.
அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.