சென்னை:  சென்னையில் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட சேரு சேகதிகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், கொசு மருந்து அடிக்கும் பணியும் நடைபெறுகிறது  என  அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை ராயபுரம் மண்டல அலுவலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, கால்வாய் கரையில்  வசிக்கும் மக்கள் கொசுத் தொல்லையில் இருந்து விடுபட கொசுவலைகளையும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “முதலமைச்சரின் உத்தரவுப்படி வடசென்னை பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். மழைநீர் செல்வதற்கு வசதியாக கால்வாய்கள் அனைத்தும் அடைப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சியினர் குறை கூற வேண்டும் என்பதற்காக ஏதாவது பேசி வருகிறார்கள். அவர்களுடைய பேச்சுக்களை கண்டு கொள்வதில்லை. அவர்களைப் பற்றி பேசுவதற்கு நேரமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டுள்ளது. சேரும், சகதியாக உள்ள இடங்களில், தூண்மை பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தவர், கொசு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும்  20 விசை தெளிப்பான், 60 பெரிய வாகனங்களில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடைபெற்ற வருகிறது என்றதுடன், இந்த பணியில் 3778 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும், செய்தியாளர்களின்  முதலமைச்சர் பொம்மை போல் செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பான எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர்,  “எடப்பாடி பழனிசாமியை போல எங்கள் முதலமைச்சர் தஞ்சாவூர் பொம்மை இல்லை” என சேகர்பாபு பதிலளித்தார்.

 இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி, ராயப்புரம் சட்டமன்ற உறுப்பினர் ஐடிரிம்மூர்த்தி, மற்றும் ஆணையாளர் சங்கர்லால் குமாவத்,  நகரமைப்பு குழுத் தலைவர் இளையஅருணா, சுகாதாரக் குழுத் தலைவர் டாக்டர் சாந்தகுமாரி, மண்டலக்குழுத் தலைவர் ஸ்ரீராமுலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.