சென்னை:

சென்னையில் வரும் 26ந்தேதி வரை 6 நாட்கள் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக சென்னைவாசிகள் மகிச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தை வாட்டி வதைத்து வந்த கடும் வெயிலில் கொடுமைக்கு தற்போது சற்றே விடிவு காலம் தொடங்கி உள்ளது. நேற்று முதல் சென்னையில் கடற்காற்று வீசி வரும் நிலையில், இன்று சில இடங்களில் லேசான மழை பெய்தது.

சென்னையில் மழை பெய்து கிட்டத்தட்ட 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில்  இன்று மதியம் ஓம்எம்ஆர் சாலை பகுதிகள், கேளம்பாக்கம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், பூவிருந்தமல்லி, தாம்பரம், ஐயப்பன்தாங்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. இதேப்போல காஞ்சிபுரம் மாவட்டத்திலும் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோயில் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.  இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னை மழை குறித்து கூறியுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  வரும் 26ந்தேதி வரை அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளார். இன்று மற்றும் நாளையும் சென்னையில் சில பகுதிகளில் வெப்பச்சலன் மழை பெய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

மேலும், வங்கக்கடலில் காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் மேற்கு தொடர்ச்சி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வயநாடு கேரளா மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.