சென்னை
நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
”தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 6-ம் தேதி வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவக்கூடும். இதனால் அப்பகுதிகளில் வரும் 7-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (மே 6, 7)சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 7, 8-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும்.
வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக் கடல் ஆகிய இடங்களில் மணிக்கு 45 முதல் 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.