சென்னை:
“தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு” உள்ளதாக சென்னை வானிலை மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்து உள்ளார்.
17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு,சேலம், குமரி, நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இயல்பு தேதியான இன்றுதொடங்கியது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபடசமாக கொடுமுடியில் 8 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. குழித்துறையில் 4 சென்டி மீட்டர், ஏற்காடு, பஞ்சப்பட்டி (கரூர்), சித்தார் (கன்னியாகுமரி), மயிலம்பட்டி(கரூர்) ஆகிய பகுதிகளில் தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை புயலாக வலுவடைந்து மேற்கு கடற்கரையை ஒட்டி வடக்கு திசையில் நகரும். இதன் காரணமாக அரபிக்கடல் பகுதி, லட்சத்தீவு பகுதி, கேரள கடலோர பகுதி, கர்நாடக, கோவா கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் இன்று முதல் ஜூன் 4ம் தேதிவரை மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசையும் ஒட்டி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.