ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால்  கோவில் பிரகாரத்தில் மழை நீர் தேங்கியது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில்  கடந்த 2 நாட்களாக ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகின்றது. நேற்று காலை ராமேசுவரம் பகுதியில் மழை பெய்யத் தொடங்கி மதியம் 2 மணி அளவில் பலத்த மழையாக பெய்ய தொடங்கியது.

அங்கு தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் ராமேசுவரம் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி, ராமநாதசுவாமி கோவிலில் அம்பாள் சன்னதி பிரகாரம் மற்றும் கோவிலின் மூன்றாம் பிரகாரம் உள்ளிட்ட இடங்களில் புகுந்தது.  கோவில்பிரகாரத்தில் தேங்கிய மழைநீரை கோவில் தூய்மை பணியாளர்கள், வாறுகால் வழியாக துரித கதியில் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கோவிலின் ரத வீதி சாலை, திட்டக்குடி சந்திப்பு சாலை, நகராட்சி அலுவலகம் எதிரே தனுஷ்கோடி சாலை உள்ளிட்ட இடங்களிலும் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆஞ்சநேயர் கோவில் எதிரே உள்ள சாலையிலும் மழைநீர் குளம் போல் தேங்கியது.