மணலி: மணலியில் ரூ.78 கோடியில் மழைநீர் கால்வாய் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு  நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் பல இடங்களில் அமைக்கப்பட்டு வரும் மழைவடிகால் பணிகள் பாதிக்கப்பட்டு, வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தலைமைச்செயலாளர் இறையன்பு,  சென்னை மணலி மண்டலத்துக்கு உட்பட்ட கடப்பாக்கம், கன்னியம்மன் பேட்டை, அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.78 கோடியில் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகள் 90 சதவிகிதம் அளவுக்கு முடிவுக்கு வந்தது.  இதன் காரணமாக மழைநீர்,  புதிதாக அமைக்கப்பட்ட இந்த கால்வாய் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலந்து வருகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இநத் நிலையில், புதிகதா அமைக்கப்பட்டுள்ள  மழைநீர் கால்வாயின் பயன்பாடுகள் குறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஆண்டார்குப்பம் சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள 3 மதகுகள் மற்றும் கால்வாய் அமைப்பு போன்றவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது திட்டமிட்டபடி மழைநீர் தடையில்லாமல் கால்வாயில் செல்வதால் பணிகளை சிறப்பாக செய்த அதிகாரிகளை அவர் பாராட்டி, எஞ்சியுள்ள கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை கூறினார்.

முன்னதாக மணலி சின்னசேக்காடு பகுதியில் மக்கும் குப்பை கழிவுகளை கொண்டு உரம் மற்றும் கியாஸ் தயாரிக்கும் மையங்களை தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். அவருடன் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்பேடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவதாஸ் மீனா, மணலி பகுதியில் கண்காணிப்பு அதிகாரியான நகர் ஊரமைப்பு இயக்குனர் பி.கணேசன், வடக்கு வட்டார துணை கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், கவுன்சிலர் தீர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

[youtube-feed feed=1]