சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக, வேளச்சேரி உள்பட முக்கிய பகுதிகளில் உள்ள மேம்பாலங்கள், கார் பாக்கிங் இடமாக மாறி வருகிறது. கனமழையை யொட்டி, சென்னை உள்பட 6 மாவட்ட பள்ளி கல்லூரிகளக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவசர உதவி எண்(Chennai Rains Help line Numbers):
சென்னை மாநகராட்சி சார்பில் அவசர உதவி எண் 1913 அழைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் வீட்டிற்குள் பாம்பு புகுந்தால் 044-22200335 என்ற எண்ணை அழைக்க கிண்டி வனத்துறையும்,
மின்தடை உள்பட மின்விநியோக பிரச்சினை என்றால் 94987 94987 என்ற அழைக்க மின்சாரத்துறையும் உதவி எண்களை அறிவித்துள்ளன.
ரயில்களின் வருகை, புறப்படும் நேரம் தொடர்பாக விவரம் அறிய ரயில்வே உதவி எண்கள் அறிவித்துள்ளது. 044-25330952, 044-25330953 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.
சென்னையில் நள்ளிரவு முதல் பெய்து வரும் மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. பல சுரங்கப்பாதைகளில் தேங்கும் தண்ணீர் உடனே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் போக்குசரத்து தடை இல்லாமல் தொடர்கிறது. ஆனால், இதனால் பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இந்த ஆண்டு, அதிகன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை மையம், சென்னை வானிலை மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்களும் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று அல்லது நாளை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக, தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு 20 செ.மீ வரை மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, சேலம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனமழை எச்சரிக்கையை அடுத்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில், இன்று(அக்.,15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவையில் அரைநாள் விடுமுறையும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களும் விடுமுறை அறிவித்து உள்ளது.
சென்னை பல்கலை.,க்கு விடுமுறைகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைஅடுத்து, சென்னை பல்கலை.,க்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பல்கலை.,யின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய, நவ.,9 ம் தேதி, கல்லூரிகள் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.
அண்ணாமலை பல்கலை., வகுப்புகள் ரத்து:சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில், இன்று வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. பல்கலை.,யின் கீழ் உள்ள கல்லூரிகளில், இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள்(IT) தங்களது ஊழியர்களை இன்று முதல் அக்.17 வரை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
அதே வேளையில், சென்னை மக்கள் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ அறிவித்துள்ளது. கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ இரயில் சேவைகள் மேற்கண்ட நாட்களில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, வேளச்சேரி போன்ற மழைநீர் தேங்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வாகனங்களை உயர்வான பகுதிகள், மேம்பாலங்களில் கொண்டுவந்து நிறுத்தி உள்ளனர். குறிப்பாக சென்னை வேளச்சேரி பகுதியில்,
இதற்கிடையில், சென்னையில் கடந்த 2015 பெரு வெள்ளத்தின் போது வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தரைத்தளம் முழுவதும் தண்ணீர் தேங்கியதோடு கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்ததால், இந்த ஆண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் உள்ள ஏராளமானோர் வேளச்சேரி மேம்பாலத்தின் நேற்று மாலை முதலே தங்களது கார்களை நிறுத்தி உள்ளனர். ஆனால் அந்த கார்களுக்கு போக்குவரத்து துறை ரூ.1000 வரை அபராதம் விதிப்பதாகஎச்சரித்தும், அதை கண்டுகொள்ளாமல், தங்களது தமிழ்நாடு அரசு மற்றும் சென்னைமாநகராட்சி மீது நம்பிக்கையில்லை என தெரிவித்து உள்ளனர்.
கடந்த வாரம் சென்னையில்பெய்த சிறு மழைக்கே வேளச்சேரியின் பல பகுதியில் தண்ணீர் தேங்கியது. அப்போது சென்னை வேளச்சேரி சாலையில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் முறையான பதில் தெரிவிக்கவில்லை. அவரது பதிலில், வேளச்சேரியில் விபத்து நடைபெற்ற மற்றும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் இரு சாலைகளுமே சென்னை மாநகராட்சிக்குள் வராது. அந்த இரு சாலைகளுமே மாநில நெடுஞ்சாலைக் கட்டுப்பாட்டில் வருவதால், தமிழக அரசு இதற்கு பதிலளிக்கும் என ஏனோதானோவென்று பதில் கூறியது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இதனால், தற்போது கனமழை எச்சரிக்கை விடுத்ததும், பொதுமக்கள் அரசின் எச்சரிக்கையை மதிக்காமல் மேம்பாலங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி உள்ளனர்.
இதற்கிடையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதலே இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகள், அண்டைய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாம்பரம், சோழிங்க நல்லூர், ஓஎம்ஆர், இசிஆர், கிண்டி, அண்ணாசாலை, எழும்பூர், புரசைவாக்கம், புதுப்பேட்டை, கோயம்பேடு, போரூர், அண்ணாநகர், மாதவரம், திருவொற்றியூர், மணலி என பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வடபழனி, மீனம்பாக்கம், அடையாறில் காலை 4 மணி வரை 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேளச்சேரியில் 5.5 செ.மீ, மற்றும் பாலவாக்கம், ராயப்பேட்டை, அண்ணா நகரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் பகுதியில் 10 செ.மீ., மழை பெய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் அதிகபட்சமாக மணலியில் 8 சென்டிமீட்டர் என்ற அளவில் கனமழை பெய்துள்ளது. நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்த நிலையில், காலை முதல் மீண்டும் சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்ய துவங்கியுள்ளது. இதனால் பல சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. அரசு ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாலும், மழை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்கி வருகின்றனர். இதனால் வாகன நெரிசல் ஏதும் எற்படவில்லை. இதற்கிடையில் பெரம்பூர் வியாசர்பாடி பகுதிகளில் உள்ள சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி உள்ளதால், அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் உள்ள பெரும்பாலான சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்று தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, பெரம்பூர் சுரங்க பாதை மட்டுமே தண்ணீர் தேங்கியதால் மூடப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கக்கூடிய மழைநீரை வெளியேற்ற 990 பம்புகள் மற்றும் 57 பம்ப்செட் பொருத்தப்பட்ட டிராக்டர் ஆகியவை தயார் நிலையில் இருக்கின்றன என்றும், மோட்டார் பொருத்தப்பட்ட 36 படகுகள் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 46 மெட்ரிக் டன் பிளீச்சிங் பவுடர், 25 மெட்ரிக் டன் சுண்ணாம்பு தூள், பினாயில் ஆகியவை தேவையான அளவு, இருப்பு வைக்கப்பட்டுள்ளதோடு, 169 நிவாரண மையங்கள், போதுமான சமையல் கூடங்கள், மீட்புப் பணிகளுக்காக 59 JCB-க்கள், 272 மர அறுப்பான்கள், நீர் இறைப்பான்கள், 130 ஜெனரேட்டர்கள், 115 லாரிகள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்து உள்ளது.