சென்னை: தென்தமிழகத்தில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு முன் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்தது. இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். ஆனால், இதற்கு மாறாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சேலம், கோவை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், இன்று தமிழகத்தின் தெற்கு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பல இடங்களில் சுழல் காற்று வீசும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நேரம் காஞ்சிபுரம், திருச்சி, பெரம்பலூர், கரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும், சென்னையில் அதிகபட்சமாக 36, குறைந்தபட்சமாக 28 டிகிரி பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.