சென்னை
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாவில் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.
தற்போது தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அதாவது, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
எனவே தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா ஆகிய 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.