தர்மபுரியில் 30 நிமிடங்களுக்கும் மேலாக மிதமான மழை பெய்தததன் காரணமாக, வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதி அடைந்தனர்.

தர்மபுரி மாவட்டத்தின் நகரப் பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென தர்மபுரி நகர் பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதனைத் தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 30 நிமிடங்கள் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதி அடைந்தனர். சிலர் மழையில் இருந்து தப்பித்துக்கொள்ள சாலையோர கடைகளில் ஒதுங்கி நின்றனர். பின்னர் மழை நின்றப்பின் புறப்பட்டு சென்றனர்.

ஆங்காங்கே பெய்த மழைநீர் தாழ்வான பகுதியில் தேங்கிக் கிடந்தன. மேலும் சாலையில் உள்ள பள்ளமான பகுதியை நோக்கி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் இருக்கும் பள்ளங்களில் மழைநீர் தேங்கியதுடன் தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலை, தர்மபுரி அரசு மருத்துவமனை எதிரே, எஸ்.வி. சாலை மற்றும் மாவட்ட விளையாட்டு மைதானம் போன்ற இடங்களில் மழை நீர் தேங்கியது. அதுமட்டும் அல்லாமல் அடைப்பு ஏற்பட்ட சாக்கடை கால்வாய்களில் நீர்நிரம்பி சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த மழையினால் தருமபுரி நகர் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.