டில்லி,

மிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து வருகிறது.

இந்நிலையில் இதுபோன்ற மழை காலங்களில் வெள்ளம் குறித்து உடனடியாக  முடிவெடுக்க தமிழக அரசு உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்து உள்ளது.

தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்துவருகிறது. அனைத்து அரசு துறைகளும் வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  சென்னை அருகே உள்ள முடிச்சூர் பகுதிகளில் இருந்து வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் பேரிடல் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டில்லியில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், ‘தமிழ்நாடு வெள்ளங்கள் கற்ற பாடங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள்’ என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அந்த அறிக்கையில்  கடந்த சில ஆண்டுகளாக அதிக மழை காரணமாக ஏற்படும் வெள்ளமும் , அதை எதிர்கொள்ளும் விதம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2015 ஆண்டின் பெரு வெள்ளம் மற்றும் 2016-ம் ஆண்டு வார்தா புயல் காரணமாகஏற்பட்ட பாதிப்பு, அதையடுத்து எடுக்கப்பட்ட  மீட்பு பணிகள் குறித்து இந்த அறிக்கையில் விரிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அதில், வெள்ளப் பாதிப்பில் இருந்து சென்னையை மீட்க,  சென்னை நகருக்கு என்று தனியாக ஒரு  உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், அந்த நிபுணர் குழுவுக்கு நிலைமைக்கு ஏற்ப விரைந்து முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் பேரிடர்களின் போது அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது ஆவணப்படுத்த வேண்டும் என்றும்  யோசனை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியதால் சிதிலமாகிப் போன பட்டாக்கள், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக், வாகன உரிமையாளர் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் போன்ற முக்கியமான ஆவணங்களின் நகல்களை சிறப்பு முகாம்கள் மூலம் உடனடியாக வழங்கியதற்கு  பாராட்டு தெரிவித்து உள்ளது.

இந்த நடைமுறையை மற்ற மாநிலங்களும் வெள்ள பாதிப்பின் போது கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த ஆவணங்களின் நகல்களை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கட்டணம் ஏதுமின்றி பெறலாம் என்று தமிழக முதல்-அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பையும் பாராட்டி உள்ளது.

2015-ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பெற்ற அனுபவத்தை கொண்டு தமிழக அரசு 2016-ம் ஆண்டில் ‘வார்தா’ புயல் வந்தபோது நிலைமையை சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் பெருவெள்ளம் போன்ற பேரிடர்களின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பல்வேறு ஆலோசனைகளும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூத்த அதிகாரிகளும், ஆய்வாளர்களும் சிறப்புக்குழுவாக தமிழ்நாட்டின் மூத்த அதிகாரிகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்களை சந்தித்தும் ஆய்வு செய்து அதன் வாயிலாக இந்த  வெளியிடப்பட்டு உள்ளது.