சென்னை:
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று பிற்பகல் முதல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடர்ந்து மழை பெய்ததால், கடலோர மாவட்டங் களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது,
கடந்த 10 நாட்களில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை சற்று வலுப்பெற்று இன்று தொடர்ந்து அதே பகுதியில் நிலவி வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக எண்ணூரில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நவம்பர் 13, 14ம் தேதிகளில் வடதிசையில் நகர்ந்து செல்லும். அதாவது 14 தேதி (நாளை) முதல் தமிழகத்தில் படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளது.
அடுத்த இரு தினங்களைப் பொறுத்தவரை காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உண்டு.
சென்னை மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில முறை மழை பெய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.