சென்னை: தமிழகத்தில் மொத்தம் 19 மாவட்டங்களில், மே 26ம் தேதியான இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தமிழகத்தில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில், நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மதுரை, சிவகங்கை, கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
மேலும், விருதுநகர், ராமநாதபுரம், துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. இவற்றில், விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்னி வெயில் வாட்டியெடுத்துவரும் நிலையில், கோடை மழை பெய்யாதோ என்று மக்கள் ஏங்கி வரும் நிலையில், இந்த அறிவிப்பு அப்படியே உண்மையாக வேண்டுமென்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.