சென்னை: சென்னையில் நேற்று 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பால் டெலிவரி மற்றும் விற்பனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என எந்த ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக, தமிழ்நாடு அரசு மக்களுக்கு தேவையான அத்தியவசதிகளை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டியது. மேலும் மழைநீரை உடனுக்குடன் அகற்ற மோட்டார் பம்புசெட்டுகள், படகுகள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினரை களத்தில் இறங்கியது. இதனால், மழை குறைந்ததும் மழைநீர் வெளியேற்றும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் வெள்ளத்தால் சூழ்ந்த பல பகுதிகளில் ஒரே நாளில் தண்ணீரின்றி காணப்பட்டது.
இந்த நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவையான ஆவின் பால் விற்பனை அதிக அளவில் நடைபெற்றுள்ளது என ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மழை காரணமாக கூடுதல் பால் விற்பனை நடைபெற்றதாகவும், கடந்த இரண்டு நாட்களாக சென்னையில், தினமும் 16 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளத.
இதுகுறித்து கூறிய ஆவின் அதிகாரி , சென்னையில் பாலுக்கு ஏற்பட்டுள்ள திடீர் தேவையின் அடிப்படையில் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாக பால் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டது. ஒருவருக்கு அதிகபட்சமாக 5 பாக்கெட்டுகள் வரை ஆவின் பால் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதற்கு மேல் மொத்தமாக கேட்டால் கொடுக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் எல்லா பகுதிகளுக்கும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. அம்பத்தூர் பால் பண்ணையில் மழை நீர் தேங்கியது. அவற்றை உடனே வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.