சென்னை: நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை பெய்ததால் சென்னையில் சேதமடைந்த சாலைகள் இம்மாதம் முதல் சரி செய்யப்படும் என்றும், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி குறைவு என்று சென்னை மாநகர மேயர் பிரியா கூறினார்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்னையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் பகுதிகள் மற்றும் வார்டுகள் வாரியாக பொதுமக்கள் தேவைகளைக் கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கும் வகையில், சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரியாவுடன் அமைச்சர் சேகர்பாபு உள்படபலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி மேயர் பிரியா, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுடன் இணைந்து அவர்களின் கோரிக்கைகளை அறிந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று முதல் ஆய்வை தொடங்கியுள்ளோம்.
இன்றைக்கு சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 44 மாமன்ற உறுப்பினர் வார்டுகளிலும், 83 வட்ட வாரியான வார்டுகளிலும் ஆய்வினை தொடங்கி உள்ளோம். இந்த ஆய்வின்போது அப்பகுதிக்குட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள், மாநகராட்சி துறை சார்ந்த செயலாளர்கள், மெட்ரோ துறை சார்ந்த அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் உடன் வருகிறார்கள்.
ஒவ்வொரு தெரு வாரியாக, வீடு வாரியாக இந்த ஆய்வினை மேற்கொண்டு உள்ளோம். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கைகளை கண்டறிந்து, அந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலே இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளோம். இப்பகுதியில் காணப்படும் சிறுசிறு குறைகளை உடனே தீர்க்கும் வகையில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளோம்.
வருகின்ற வழியில் அங்கன்வாடியை பார்த்தோம். அங்கு என்னென்ன தேவைகள், குறைபாடுகள் என்பதை கேட்டு கண்டறிந்தோம். அந்த குறைபாடுகள் வரும் நாட்களில் தீர்க்கப்படும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். சிறுசிறு குறைகளை பொதுமக்களிடம் நேரடியாக கேட்டு, கண்டறிந்து அந்த குறைகளை அந்த துறையினருடன் இணைந்து குறைகளை தீர்க்கும் வகையில் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளோம்.
இப்போது வரை 5000 பகுதிகள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. சீரமைக்க முடியாத பகுதிகளில் புதிதாகவே சாலைகள் போடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது தான் மழைக்காலம் முடிந்துள்ளது. இந்த மாதம் முதல் தொடர்ந்து சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.
சென்னை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வரி போடப்படாமல் இருந்தது கடந்த 2022 ஆம் ஆண்டுதான் சொத்து வரியை குறைவாக உயர்த்தினோம். கேரளா, ஆந்திரா வட மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி குறைவாகத்தான் வசூலிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படக் கூடிய தேவைகள் அதிகமாக உள்ளது. மாநகராட்சி சார்பில் சாலை பராமரிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
மத்திய அரசு கொடுக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் அரசு சார்பில் மிகக்குறைவாக வரி வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு சாலைகள் போடப்பட்டு வருகிறது.
நவம்பர், டிசம்பர் மாதம் பெய்யும் மழையால் சாலைகள் குண்டும் குழியமாக மாறிவிடுகிறது, மாநகராட்சி சார்பில் ஐந்தாயிரம் பகுதிகள் கண்டறியப்பட்டு 3 பகுதிகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது, பேட்ச் ஒர்க் செய்ய சூழல் இல்லாத சாலைகளில் புதிதாகவே சாலை போட்டு வருகிறோம்.
தற்போது தான் மழை முடிந்திருக்கிறது, மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்த மாதம் முதல் சாலைகள் போடப்படும்” எனக் கூறினார்.