சென்னை: மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தற்போது மழை குறைந்த நிலையில், மாநகராட்சி பணியாளர்கள் மழைநீரை மோட்டார் பம்புசெட்டுகள் மூலம் அகற்றினார். இதனால் பல சாலகளில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன போக்குவரத்துக்கு இடைஞ்சராக உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ. வ.வேலு சென்னை மழையினால் பாதிக்கப்பட்ட ஓ.எம்.ஆர். சாலை உள்பட பல்வேறு பாதிக்கப்பட்ட சாலைகளை அதிகாரிகளுடன் சென்று நேரில்  ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘ஓ.எம்.ஆர்.சாலை, கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம் நெடுஞ்சாலைகளில் நீர் வெளியேற்றப்பட்டன. 2 மணி நேரத்தில் நீர் வெளியேற்றப்பட்டதால், அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

சாலையில்  தேங்கிய தண்ணீரை அகற்ற நெடுஞ்சாலை துறை சார்பாக 19 இடங்களில்  நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓ.எம்.ஆர். சாலையில் தண்ணீர் தேங்கியதற்கு மெட்ரோ பணிகள் நடந்து வருவதுதான் காரணம். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல்  தண்ணீர் அகற்றப்பட்டு, போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கிறோம் என்றவர்,  சென்னை மாநகராட்சியில் 270 கிலோ மீட்டர் சாலைகள், 347 சிறு பாலங்கள், புது பாலங்கள், 237 மழை நீர் வடிகால் கிரேன் இவைகளை நெடுஞ்சாலை துறை முலமாக நேரடியாக பராமரிக்கிறோம்.

மழைக்காலங்களில் சாலைகளில்,  நீர் தேங்காமல் இருக்க பொறியாளர்களுக்கு ஆலோசனை வழங்கி மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கிறோம்.

சென்னையில் உள்ள முக்கிய  6 சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கிவிடக்கூடாது என்பதற்காக 51 வாட்டர் பம்புகளை வைத்து நீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து சீராக உள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்காக 6 ஜெனரேட்டர்கள் வைத்து பராமரித்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு தெரிவித்தார்.