தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரியில் தொடர் மழையும், கடல் சீற்றமும் காணப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீரோடிவள்ளவிளை, மார்த்தாண்டம் துறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அப்பகுதிகளில் தொடர் கடல் சீற்றம் காரணமாக கடற்கரை பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மீனவ மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடல் சீற்றம் காரணமாக நீரோடி மீன்பிடி இறங்குதளம் பகுதியளவில் இடிந்து விழுந்தது.
தொடர் மழை காரணமாக மார்த்தாண்டம் துறை, இரவிக்குட்டன் துறை இடையிலான சாலை சேதமடைந்தது. தொடர் மழை, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் 10 முதல் 15 அடி வரையிலான உயரத்தில் அலைகள் எழும்புகின்றன. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.