டெல்லி:

யில்வேத்துறை தனியார்மயமாகாது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வரும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையும் தனியார் கைகளுக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதற்கு உதாரணமாக, சில ரயில்வே நிலையங்களை பராமரிக்கும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது. அதுபோல சில ரயில் போக்குவரத்தையும் தனியாருக்கு மாற்றி உள்ளது. இதனால் ரயில்வே துறையில் பணியாற்றி வரும் லட்சக்கணக்கான ஊழியர்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

இந்த நிலையில், பாராளுமன்ற ராஜ்யசபாவில் பீகாரைச்சேர்ந்த எம்.பி. ஒருவர் மாநிலத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, மற்றும் தனியார் மயம் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ,ரயில்வேயை தனியார்மய மாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை, ஆனால், சில பணிகளை மட்டுமே, தனியாருக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள், பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கும் நோக்கிலேயே வழங்கப்படுகிறது என்று கூறினார்.

மேலும், பீஹாரில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, 362 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது, மாநிலத்தில், 55 ரயில்வே பணிகள் நடந்து வருகின்றன.