டில்லி:
ரயில்களில் இரவு மற்றும் காலையில் நீண்ட நேரம் தூங்வது தொடர்பாக லோயர் மற்றும் மிடில் பெர்த் பயணிகளுக்கு இடையே அடிக்க ஏற்பட்டு வரும் சண்டையை முடிவுக்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெரும்பாலான பயணிகள் ரயிலில் பகல் அல்லது இரவு நேரம் என எப்போது ரெயிலில் ஏறினாலும் உடனடியாக படுத்து தூங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் இதர பயணிகளுக்கு அசவுகர்யம் ஏற்பட்டு வருகிறது.
உதாரணமாக கொல்கத்தா – டில்லி இடையிலான ரயிலில் லோயர் பர்த் பயணி பயண நேரம் முழுவதும் தொடர்ந்து தூங்கினால் அப்பர், மிடில் பெர்த் பயணிகள் அங்கேயே உட்கார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த பிரச்னை சைடு பெர்த்துகளில் தான் அடிக்கடி ஏற்படும். சைடு அப்பர் பெர்த்தை சேர்ந்த பயணிக்கு சைடு லோயர் பெர்த்தை பயன்படுத்தும் உரிமை இல்லாமல் போய்விடுகிறது. இதனால் ரெயில்களில் பயணிகள் தூங்குவதற்கான நேரத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ரயில்களில் படுக்கை வசதிக்கு முன்பதிவு செய்த பயணிகள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தூங்கலாம் என்ற விதிமுறை தற்போது அமலில் இருந்தது. இது தற்போது 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இனி தூங்க அனுமதி வழங்கப்படுகிறது.
இதர நேரத்தில் உட்கார்ந்து மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படும். நோயாளி பயணிகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் போன்றவர்கள் கூடுதல் நேரம் தூங்க விருப்பப்பட்டால் அதற்கு அனுமதி உண்டு. இந்த புதிய உத்தரவு முன்பதிவு செய்யப்படும் அனைத்து படுக்கை வசதி கொண்ட ரயில்களுக்கும் பொருந்தும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘‘லோயர் படுக்கை வசதி மற்றும் மிடில் படுக்கை முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தும். இந்த இரண்டு படுக்கைகளில் பயணம் செய்யும் பயணிகள் அதிக நேரம் தூங்கிவிட்டால், விழித்திருக்கும் மற்ற பயணிகள் அமர்ந்து வர இடையூறு ஏற்படுகிறது.
அதனால் அனுமதிக்கப்பட்ட தூங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏதும் பிரச்னைகள் ஏற்பட்டால் டிக்கெட் பரிசோதகர்கள் தீர்த்து வைப்பார்கள்’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.