டேராடூன்

டந்த 20 வருடங்களாக சிறுநீரக மோசடியை நாடெங்கும் நடத்தி வந்த குமார் என்பவர் உத்தரகாண்ட் போலீசாரால் அரியானாவில் பஞ்சகுலா என்னும் இடத்தில் கைது செய்யப்பட்டார்.

டேராடூன் புறநகர் பகுதியில் உள்ளது கங்கோத்ரி தொண்டு நிலைய மருத்துவமனை.   இதை நடத்துபவர் குமார் என சொல்லப்படும் 61 வயதான ஒரு நபர்.  இவர் பல பெயரில் உலவி வந்துள்ளார். அமித் குமார்,  அமித் ரவுத், சந்தோஷ் ரவுத் என்பது இவரது பெயர்களில் குறிப்பிடத்தக்கவை.   இவர் ஏழை மக்களிடம் இருந்து சிறுநீரகத்தை திருடி பணக்காரர்களுக்கு விற்று வந்துள்ளார்.  இது சுமார் 20 வருடங்களாக நடை பெற்று வந்துள்ளது.

இவரது இந்த சிறுநீரக மோசடி, குஜராத், நேப்பாளம், பஞ்சாப், உத்தாகாண்டு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.   இவர் இந்த குற்றங்களுக்காக பல முறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ளார்.   ஜாமீனில் வந்த பின் பெயரை மாற்றிக் கொண்டு வேறு பெயரில் சிறுநீரகத் திருட்டை மீண்டும் ஆரம்பித்து விடுவார்.

சமீபத்தில் 2013ல் பிடிபட்ட இவருக்கு சிபிஐ நீதிமன்றம் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும்  விதித்திருந்தது.  இவரை பயங்கர டாக்டர் என சி பி ஐ குறிப்பிட்டுள்ளது.   ஆனால் எப்படியோ ஜாமீனில் வெளிவந்து மீண்டும் இந்த சிறுநீரக மோசடியை தொடர்ந்துள்ளார்.   போலீசார் இவரைப் பற்றி தெரிந்துக் கொண்டு கைது செய்ய வரும் போது தப்பி விட்டார்.

கடும் தேடுதலுக்குப் பின் அரியானாவில் பஞ்சகுலா பகுதியில் இவரைக் கண்டுபிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.   இவருடன் இவர் சகோதரர் ஜீவன், மற்றும் பில்லு என அழைக்கப்படும் ஒரு நர்ஸ் மற்றும் அவர் ஓட்டுனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இரண்டு சொகுசு கார்களும் ரூ.33 லட்சம் ரொக்கமும் இவரிடம் இருந்து கைப்பற்றப் பட்டுள்ளன

போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.