வாபி
ஒரு ரயில்வே காவலர் தனது உயிரை பணயம் வைத்து பயணியைக் காப்பாற்றி உள்ளார்..
குஜராத் மாநிலத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பயணி ஒருவர், ஒரு நடைமேடையில் இருந்து அடுத்த நடைமேடைக்குச் செல்வதற்காகத் தண்டவாளத்தில் இறங்கியுள்ளார். அவர் அப்போது தடுமாறி தண்டவாளத்தின் இடையே விழுந்துள்ளார்.
அதே நேரத்தில் அந்த தண்டவாளத்தில் சூரத்-பாந்த்ரா டெர்மினஸ் இன்டர்சிட்டி ரயில் விரைந்து வந்துகொண்டிருந்தது. வீராபாய் மேரு என்ற ரயில்வே காவலர் இதைக் கவனித்துள்ளார். அவர் நடைமேடையில் இருந்து குதித்து அந்த நபரை நோக்கி விரைந்து சென்றார்.
விழுந்த பயணியைப் பிடித்து தண்டவாளத்திலிருந்து இழுக்க, அவர் நூலிழையில் உயிர் தப்பினர். சரியாக அடுத்த வினாடி ரயில் கடந்து சென்றது. ரயில்வே காவலரின் துரித நடவடிக்கையால் விபத்து மற்றும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
தனது உயிரைப் பணயம் வைத்து ஒரு ரயில்வே காவலர் பயணியின் உயிரைக் காப்பாற்றியது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.. இந்த காணொளி தற்போது வைரலாகி அனைத்து ஊடகங்களிலும் பேசு பொருளாகி உள்ளது.