டில்லி

காத்திருப்பு பட்டியலில் பதிவு செய்து பின்பு ரத்து செய்யப்படும் கட்டணம் மூலம் இந்திய ரயில்வே ரூ.1229 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.

காத்திருப்பு பட்டியலில் பதிவு செய்யப்பட்ட டிக்கட்டுகள் ரத்து செய்யப்படும் போது அதற்குக் கட்டணம் விதிப்பது ரயில்வே விதிமுறைகளில் ஒன்றாகும்.  இந்த ரத்து கட்டணம் புறப்படு நேரத்துடன் உள்ள இடைவெளி மற்றும் வகுப்பு ஆகியவற்றை பொருத்து மாறுபடும்.

உதாரணமாகப் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு வரை ரத்து செய்யும் இரண்டாம் வகுப்பு டிக்கட்டுகளுக்கு ரூ.60 வசூலிக்கப்படும்,  மேலும் ஏ சி வகுப்புகளுக்கான ரத்து கட்டணம் ரூ.120 முதல் ரூ.240 வரை இருக்கும்.  மேலும் இந்திய ரயில்வே விதிகளின்படி முழு கட்டணத்தையும் திரும்பிப் பெற வேண்டும் என்றால் ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முபே ரத்து செய்ய வேண்டும்.

இந்நிலையில் கடந்த 2021-24 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்ற டிக்கட்டுகள் ரத்து கட்டணம் மூலம் ரூ1229.85 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.   இந்த தகவல் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவரின் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட மனு மூலம் தெரிய வந்துள்ளது.