தஞ்சை,

சிகலாவை பாதுகாக்க ஜெயலலிதா தவறிவிட்டதாக சசிகலாவின் தம்பி திவாகரன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதா பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

அதுபோல டிடிவி தினகரனும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதான் முதல் குற்றவாளி என்றும் கூறி உள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என கர்நாடக தனிக்கோர்ட்டின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டும் உறுதிபடுத்தியதால்,  4 ஆண்டுகள் சிறைதண்டனை உறுதியானது. ஆனால், ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட காரணத்தால், மற்ற குற்றவாளிகளான  சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்

இதன் காரணமாக சசிகலாவின் முதல்வர் ஆசைக்கு சம்மட்டி அடி விழுந்தது. கட்சியை கைப்பற்றிய எண்ணிய அவர்களது குடும்பத்தினர்  ஆசைக்கும் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் சசிகலா உறவினர்களின் வீடுகள், நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு, ஏராளமான சொத்து ஆவனங்கள், தங்க நகைகள், விலைமதிக்க முடியாத வைரங்கள் கைப்பற்றி உள்ளதாகவும், அதுகுறித்து அவர்கள் ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சூசழலில், மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன் ஜெயலலிதா தனது சகோதரியை பாதுகாக்க தவறி விட்டார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

ஜெயலலிதா சசிகலாவை முழுமையாக பயன்படுத்திக்கொண்டார்,  ஆனால், எங்களை நிராயுதபாணியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.  33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்த எனது அக்காவை தன்னந்தனியே தவிக்க விட்டுச் சென்றுவிட்டார். தனக்குப் பிறகு சசிகலாவுக்கு எந்த பாதுகாப்பும் செய்யாமல் அவர் சென்றுவிட்டார்.

தற்போது எனது சகோதரி சசிகலா சிறையில் வாடுகிறார்.  சசிகலாவின் நிலைமை வேறு எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது. எல்லா பெண்களுக்கும் தற்போது சசிகலா ஒரு சரியான உதாரணம். சசிகலாவை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்த திவாகரன்,  சிகிச்சையின் போது, வீடியோ எடுத்து வைத்துக் கொள், நம்மிடமே துரோகக் கும்பல் இருக்கிறது என்று சசிகலாவிடம் கூறியதே ஜெயலலிதாதான் என்றும் கூறினார்.

33 ஆண்டுகளாக ஜெயலலிதா கூடவே இருந்த சசிகலாவுக்கு போதிய பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தாமல் போனதுதான் கேள்விக்குறியாகவே உள்ளது.

இவ்வாறு சசிகலா சிறைக்கும், தங்கள் குடும்பத்தினர் தற்போது சந்தித்து வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜெயலலிதா தான் காரணம் என்பதுபோல  அவர் கூறினார்.

அதுபோல  சமீபத்தில் தனியார்  டிவி பேட்டி ஒன்றில் பேசிய டிடிவி தினகரன், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாதான் A1 குற்றவாளி என்று கூறியிருந்தார்.

இதன் காரணமாக ஜெ.தான் முதல் குற்றவாளி என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், தற்போது திவாகரனும், தனது அக்காவுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய ஜெயலலிதா மறந்துவிட்டதாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஜெயலலிதாவை முன்னிறுத்தி சசிகலா குடும்பத்தினரே அனைத்து  முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததும், அதன் காரணமாகவே தற்போது விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளதும், அவர்களின் சொத்து மதிப்பு தமிழக மக்களையே மலைக்க வைத்துள்ள நிலையில், சசிகலா குடும்பத்தினர் தற்போது ஜெயலலிதா மீது குற்றம் சாட்டி வருவது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

மன்னார்குடி குடும்பத்தினரின் உண்மையான முகம் வெளியே தெரிய வந்துள்ளதாக சமூக வலைதளங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.