அகமதாபாத்
ராகுலின் ட்விட்டர் பதிவால் குஜராத் முதல்வர் ஒரு போர் தியாகியின் மகளுக்கு உதவி புரிந்துள்ளார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த எல்லைக் காவல் படை வீரரான அசோக் தாட்வி கடந்த 2002ஆம் அண்டு காஷ்மீர் பயங்கர வாதிகளால் கொல்லப்பட்டார். அவர் மரணத்தால் தவிக்கும் அவருடைய குடும்பத்தினர் அரசின் உதவிக்காக பதினைந்து வருடங்களாக அலைந்து வந்துள்ளனர். அரசின் தலைமைச் செயலர் வரை அனைத்து அதிகாரிகளிடமும் இவர்கள் முறையிட்டும் ஒரு உதவியும் கிடைக்கவில்லை.
சமீபத்தில் நர்மதா பகுதியில் ஒரு பேரணியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கலந்துக் கொண்டார். அப்போது மறைந்த வீரர் அசோக் தாட்வியின் மக்ள் ரூபல் தாட்வி முதல்வரை சந்திக்க முற்பட்டுள்ளார். அவர் பேரணியில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது பாதுகாவலர்களை மீறி அவர் சென்றுள்ளார். அவரை போலீசார் இழுத்து நிறுத்தி உள்ளனர். அந்தப் பெண்ணை பிறகு சந்திப்பதாகவும் அவரை உடனடியாக அங்கிருந்து அகற்றும் படியும் முதல்வர் கூறி உள்ளார். ஆகவே போலிசார் ரூபல் தாட்வியை தர தர என இழுத்து அப்புறப்படுத்தி உள்ளனர். இந்த நிகழ்வு வீடியோவாக எடுக்கப் பட்டு வைரலானது.
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்த ராகுல் காந்தி. “பாஜக வின் வன்முறை உச்சத்தை அடைந்து விட்டது. ஒரு போர் தியாகியின் மகளை போலீசாரால் இழுத்துச் செல்வதன் மூலம் தனது நாட்டுப் பற்றை மிக அழகாக விஜய் ரூபானி நிரூபித்து மனிதத்தன்மைக்கே அவமானம் செய்து விட்டார். கடந்த 15 வருடங்களாக துயருறும் அந்தக் குடும்பத்துக்கு நீதி வழங்கி உங்கள் அவமானத்தை துடைத்துக் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த டிவீட் வந்த ஒரிரு தினங்களில் விஜய் ரூபானியின் அரசு தாட்வியின் குடும்பத்துக்கு நான்கு ஏக்கர் நிலம், ரூ10000 மாத உதவித் தொகை அது தவிர மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 36000 உதவித்தொகையும் அளித்துள்ளது. மேலும் அரசு சார்பில் வீடு கட்ட 200 சதுர அடி நிலமும் அளித்துள்ளது. இது குறித்து விஜய் ரூபானி தனது டிவிட்டர் பக்கத்தில், “எல்லையை காக்கும் வீரர்களை என்றும் மதிப்பது பாஜக மட்டுமே. போர் தியாகிகளின் பெயரால் அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதை ராகுல் நிறுத்த வேண்டும். இது போல உங்களுடைய நடவடிக்கைகளினால் தான் நீங்கள் பதிவியில் இருந்து மக்களால் தூக்கி எறியப்பட்டீர்கள். உங்கள் காலத்தில் ஒரு பதவிக்கு ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமுல் படுத்தாமல் இப்போது எங்களைக் குறை சொல்ல வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.