த்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடுவார் என 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தென் மாநிலத்தில் இருந்தும் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கடந்த இரு நாட்களாக காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி,சிவகங்கை,விருதுநகர் ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் ராகுல்  போட்டியிட வேண்டும் என்பது தமிழக காங்கிரசாரின்  விருப்பம்.ராகுல் பெயரில் காங்கிரசார் இந்த தொகுதிகளில் விருப்ப மனு அளித்துள்ளனர்.

‘’இந்தியா தெற்கு-வடக்கு என பிளவு பட்டு நிற்கிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க.ஆட்சிக்கு வந்த பின் இந்த பிளவு மேலும் அதிகமாகி விட்டது.தமிழ்நாட்டில் ராகுல் போட்டியிட்டால் இந்த பிளவை சமன் படுத்தலாம். எனவே அவர்  தமிழகத்தில் நிற்க வேண்டும் என்பது எங்கள் ஆசை.அண்மையில் அவர் தமிழ்நாடு வந்திருந்த போது –உத்தரபிரதேசத்தோடு உங்களை சுருக்கி கொள்ள வேண்டாம் என்று சொன்னேன்’’ என்கிறார்- தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

இது ஒரு சாக்கு போக்கான வார்த்தை.தென்னகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் ராகுல் போட்டியிடுவது உறுதி.

காரணங்கள் வேறு.

அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை என சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஒரு மாதத்துக்கு முன்பாகவே அறிவித்து விட்டன.

இப்போது இரு கட்சிகளின் நிலை வேறாக உள்ளது.

அகிலேஷ் யாதவை அரசியலில் இருந்து ஒழித்து கட்டுவதாக சபதம் எடுத்து தனிக்கட்சி நடத்தி வரும் அவரது சித்தப்பா சிவபால் யாதவ் மற்றும் மாயாவதியின் பரம வைரியான பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் –கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இவர்களிடையே ஒரு புதிய கூட்டணி உருவானால்- சமாஜ்வாதியும்,பகுஜன் சமாஜும் பெருத்த அடி வாங்கும்.

இதனால் ஆத்திரம் அடைந்துள்ள- அகிலேஷ் யாதவும், மாயாவதியும்- ராகுலுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த ஆயத்தமாகி வருகிறார்கள்.

அப்படி நடந்தால் ராகுல் வெற்றியில் சிக்கல் ஏற்படலாம் என்பதால் அவரை தென்னகத்திலும் களம் இறக்க முயற்சிகள் நடக்கின்றன.

தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 3 % ஓட்டுகள் தான் உள்ளன. ஆந்திராவை இரண்டாக பிரித்த பின்- ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் காங்கிரஸ் செல்வாக்கை இழந்து விட்டது.

கேரளத்தில் சி.பி.எம்.கூட்டணியை எதிர்த்து அரசியல் நடத்தி கொண்டிருக்கிறது-காங்கிரஸ்.

எனவே இந்த 4 மாநிலங்களிலும் ராகுல் நிற்கப்போவதில்லை.

அவரது சாய்ஸ்-கர்நாடகம்.

ஏன்?

அங்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவியில் உள்ளது.

மாநிலத்தில் ஆங்காங்கே வாக்குகளை வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் –காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக கர்நாடகத்தில் –காங்கிரஸ் பல தொகுதிகளில் வலுவாக உள்ளது.

எனவே ராகுலுக்கு பாதுகாப்பாக பார்க்கப்படுகிறது-கர்நாடகம்.

–பாப்பாங்குளம் பாரதி