அகமதாபாத்:

குஜராத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார் மீது தாக்குதல் நடந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு ராகுல்காந்தி ஆறுதல் கூறி வருகிறார். பனாஸ்காந்தா பகுதியில் ராகுல் காந்தி சென்ற போது அவர் கார் மீது தாக்குதல் நடந்தது. கல்வீச்சில் கார் கண்ணாடி உடைந்தது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க எதிர்ப்பு தெரிவித்து ராகுலுக்கு எதிராக சிலர் கருப்பு கொடி காட்டினர்.

இச்சம்பவத்தில் ராகுல் காந்திக்கு அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு காயமும் இன்றி தப்பினார். விரைவில் ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு எதிராக கருப்பு கொடி காட்டியவர்கள் பிரதமர் மோடி என கோஷம் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தினால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “பனாஸ்காந்தாவில் லால் சவுக் பகுதியில் ராகுல் காந்தியின் கார் மீது பாஜ குண்டர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மிகவும் வெறுக்கத்தக்க மற்றும் அவமானகரமான செயல். திட்டமிடப்பட்ட தாக்குதலில் ராகுல் காந்தியின் கார் கண்ணாடி உடைந்து உள்ளது. பாதுகாப்பு வீரர் காயம் அடைந்துள்ளார்’’ என்றார்.