ரவுடி துபே வழக்கில் எதிர்பாராத திருப்பம்  புகார் அளித்தவர் ’திடீர்’ மாயம்.. உயிருக்கு ஆபத்து என போலீஸ் எச்சரிக்கை..

உத்தரபிரதேசமாநிலம் கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தை சேர்ந்த ரவுடி விகாஸ் துபே போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டது, அந்த மாநிலத்தில்  மட்டுமல்லாது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வழக்கு தொடர்பாக துபேயை கைது செய்வதற்காக பிக்ரு கிராமத்துக்குச் சென்றபோது, 8 போலீசார் கடந்த 3 ஆம் தேதி அதிகாலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்தே இந்த கொலைக்குக் காரணமான துபேயை போலீசார் தேடி அலைந்தனர்.

அவன் மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் பிடிபட்டதும், உ.பி.போலீசாரால் கான்பூர் அழைத்து வரப்பட்டபோது, என்கவுண்டரில் வீழ்த்தப்பட்டதும் ஊரே அறிந்த கதை.

இந்த வழக்கில் எதிர்பாராத புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

8 போலீசார் கொல்லப்பட்டது, பின்னர் துபே என்கவுண்டரில் வீழ்த்தப்பட்டது போன்ற சம்பவங்களுக்கெல்லாம் காரணமாக இருந்த ‘ புகார்தாரரை’’ இப்போது காணவில்லை.

அவர் பெயர்- ராகுல் திவாரி. ரவுடி துபேயின் பிக்ரு கிராமத்துக்கு பக்கத்தில் உள்ள ஜாடேபூரில் வசிக்கிறார்.

துபே மீது இவர் தான் நில அபகரிப்பு புகார் கொடுத்தவர் ஆவார்.

கடந்த ஒன்றாம் தேதி சுபேபூர் காவல்நிலையத்தில் சப்.இன்ஸ்பெக்டர் வினய் திவாரியிடம், துபே மீது புகார் அளித்துள்ளார், ராகுல்.ஆனால் அந்த சப்- இன்ஸ்பெக்டர், ‘புகார் எல்லாம் வேண்டாம். சமாதானமாகப் போகலாம்’’ என்று கூறி, மறுநாள் ( 2 ஆம் தேதி) ராகுலை பிக்ரு கிராமத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் துபேயின் அடியாட்கள், ராகுலையும், அவரை அழைத்துச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் வினய் திவாரியையும் அடித்து உதைத்து விரட்டி உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த சூபேபூர் டி.எஸ்.பி. தேவேந்திர மிஸ்ரா, அன்று மாலையே , துபே மீது வழக்கு பதிவு செய்தார்.

அடுத்த கணமே, பெரும் போலீஸ் படையுடன் பிக்ரு கிராமத்துக்கு சென்று, துபேயை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது நடந்த மோதலில் அவரும், 7 போலீசாரும் உயிர் இழந்தனர்.

பல உயிர்களை காவு வாங்கிய கான்பூர் களேபரத்துக்கு காரணமான ராகுல் திவாரியை கடந்த சில நாட்களாகவே காணவில்லை என இப்போது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் ராகுல், முக்கிய சாட்சியும் ஆவார்.

அவர் மாயமான திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ள கான்பூர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் தினேஷ்குமார்’’ ராகுல் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது’’ என்றும் அதிரடி கிளப்பியுள்ளார்.

ராகுலை தேடும் பணியில் போலீஸ் படை ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உ.பி.யை கதி கலங்க வைத்த ரவுடி துபே வழக்கின் முக்கிய சாட்சி மாயமான சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை உருவாகியுள்ளது.

-பா.பாரதி.