ஐதராபாத்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என ராகுல் காந்தி கூறி உள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம் நர்சாபூர் மற்றும் ஐதராபாத் சரூர் நகர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. ராகுல் காந்தி கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.
ராகுல் காந்தி தனது உரையில்,
”இந்திய அரசியலமைப்பு ஒரு புத்தகம் மட்டும் அல்ல. ஏழைகளின் இதய துடிப்பு. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டத்தை அதிரடியாக மாற்றுவோம். இட ஒதுக்கீட்டை ஒழிப்போம் என்று பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் கூறி வருகிறது.
அம்பேத்கர், மகாத்மா காந்தி, நேரு ஆகியோர் அரசியல் சட்டத்துக்காக போராடினார்கள். அவர்கள் உருவாக்கிய அரசியல் சட்டத்தை மாற்றி அவர்களின் தியாகத்தை வீணாக்குவது தான் பா.ஜ.க.வின் யோசனையாக தற்போது இருக்கிறது. அரசியல் சாசனத்தை காங்கிரஸ் முன் நின்று பாதுகாக்கும். தற்போது இதற்காகத்தான் தேர்தல் போர் நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 22 பெரிய தொழிலதிபர்களுக்காக மோடி உழைத்தார். அவர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். இந்த நிதி மூலம் நாடு முழுவதும் 24 ஆண்டுகளுக்கு தேவையான வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்திருக்கலாம்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம். நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் சட்டப்படி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஊதியம் ரூ.250-ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்படும்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படும். கோடீஸ்வரர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி அரசு கோடீஸ்வரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றியது.
நாங்கள் ஏழைகளை கோடீஸ்வரர்களாக மாற்றுவோம். தொழிலதிபர்களின் லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் தள்ளுபடிக்கு பதில் சொல்லாதவர்கள் ஏழைகளுக்கு நல்லது செய்வீர்களா என எங்களை பார்த்து கேள்வி கேட்கின்றனர். நாங்கள் எப்போதும் ஏழைகளின் பக்கம் தான் நிற்கிறோம். ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் இந்தியா முழுவதும் 30 லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம்.
என்று தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi,Telengana, Election campaign, Agricultural debt, complete waiver,