சென்னை:
நீலகிரி மாவட்டம் கூடலுாரில் ராகுல் காந்தி நாளை நடைபயணம் மேற்கொள்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேசிய ஒற்றுமைக்காக, தமிழகத்தில் ராகுல் துவங்கிய முதல் கட்ட நடைபயணம், 59 கிலோ மீட்டர் துாரம் கன்னியாகுமரி மாவட்டத்திலும்; 450 கிலோ மீட்டர் துாரம் கேரள மாநிலத்திலும் நடந்தது.வரும், 29ம் தேதி நீலகிரி மாவட்டம், கூடலுாருக்கு வருகிறார் ராகுல். அன்று மாலை நான்கு மணிக்கு கூடலுார் ஆமைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரிக்கு அருகில் உள்ள கோழி பாலத்திலிருந்து நடைபயணத்தை தொடர்கிறார்.
அப்பகுதியில் மட்டும், 6 கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ளும் அவர், மாலை 6 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அவரது நடைபயணத்தின் வாயிலாக, கூடலுார் பகுதியில் உள்ள படுகர் இன மக்களையும், அங்கே வாழ்கிற மொழி சிறுபான்மை மக்களையும், நேரடியாக சந்திக்கிற வாய்ப்பு ராகுலுக்கு கிட்டியிருக்கிறது. இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.