ரூர்

தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  தமிழக  முதல்வரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தென் மாவட்டங்களில் நேற்று முதல் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.  இன்றும் அவர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.  நேற்று கரூரில் நடந்த கூட்டத்தில்  தமிழக முதல்வரைக் கடுமையாக விமர்சித்துப் பல கேள்விகளை முன் வைத்துள்ளார்.

ராகுல் காந்தி, “பிரதமர் மோடி தமிழ்நாட்டைத் தனது தொலைக்காட்சி பெட்டியாக நினைத்துள்ளார்.  அவர் நினைத்த போது ரிமோட்டை எடுத்து எதையும் மாற்றி வருகிறார்.  அவர் ஒலியை அதிகரித்தால் முதல்வர் அதன்படி குரல் எழுப்புகிறார்.  குறைத்தால் முதல்வரும் அடங்கி விடுகிறார்.

இதைப் போல் தமிழக மக்களையும் கட்டுப்படுத்த பிரதமர் நினைக்கிறார்.   ஆனால்  தமிழக மக்கள் அந்த ரிமோட்டில் உள்ள பேட்டரியை எடுத்து விட்டு ரிமோட்டையும் தூக்கி எறிய உள்ளனர்.

நான் இரவில் படுத்தால் 30 நொடிகளில் உறங்கி விடுகிறேன். ஏனெனில் எனக்குப் பிரதமர் மோடியிடம் பயம் இல்லை. ஆனால் தமிழக முதல்வரால் அவ்வாறு தூங்க முடியுமா? முடியாது. ஏனெனில் அவரிடம் நேர்மை இல்லை.  அவரிடம் நேர்மை இல்லாததால் மோடியின் முன்னால் நிற்கவும் முடிவதில்லை.

தமிழக முதல்வர் ஊழல் நிறைந்தவராக உள்ளதால் மோடி அவரை ஆட்டி வைக்கிறார்.  அது மட்டுமின்றி தமிழக மக்களையும்  ஆட்டி வைக்கலாம் என நினைக்கிறார்.  அது ஒரு போதும் நடக்காது.” எனத் தனது உரையில் தெரிவித்துள்ளார்.