டில்லி,
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை காங்கிரஸ் தேர்தல் செயலாளர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக தற்போது சோனியா காந்தி இருந்து வருகிறார். அவரது உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுலை நியமிக்கலாம் என பலவாறாக கருத்து கூறப்பட்டு வந்தது.
சோனியா காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் கட்சியின் மூத்த தலைவர்களும் கோரி வந்தனர்.
ஏற்கனவே கடந்த நவம்பர் 20ந்தேதி நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. மத்திய தேர்தல் பிரிவு தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தேதி: டிசம்பர் 1 என்றும், வேட்பு மனுத்தாக்கலுக்கான கடைசி தேதி டிசம்பர் 4 என அறிவிக்கப்பட்டது.
அதன்படி ராகுல்காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இன்று வேட்புமனுக்கள் குறித்த பரிசீலனை நடைபெற்றது.
இதில் ராகுல்காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் பிரிவு தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் அறிவித்தார்.
இதையடுத்து ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் விரைவில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராகுல்காந்தி கடந்த 2013-ம் ஆண்டு முதல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் , தற்போது ராகுல்காந்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவராக முடி சூட்டப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல்காந்திக்கு, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் காங்கிரஸ் தலைவரும், அவரது அம்மாவுமான சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்திக்கு தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் திருநாவுக்கரசர் தலைமையில், முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர், கிருஷ்ணசாமி,வாழப்பாடி ராமசுகந்தன் செல்லக்குமார், உள்பட முக்கிய நிர்வாகிகள் மலர் கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.