டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002 முதல் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 தேர்தலில் பாஜகவிடம் தோல்வி அடைந்தார். அங்கு, பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டதால், அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான, கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து அவர் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார்.
தற்போது வயநாடு தொகுதியில், கம்யூனிஸ்டு கட்சி சார்பில், மூத்த தலைவர் ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு காங்கிரஸ் கட்சி போட்டியிட்டால் வெற்றிபெறுவது கடினம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராகுல்காந்தி, மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை காங்கிரஸ் கட்சி, உ.பி. மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், ராகுல் அமேதியில் போட்டியிட்டால் வெற்றிவாய்ப்பு உள்ளதால், மீண்டும் அங்கு போட்டியிட ராகுல் விரும்புவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உத்தரப்பிரதேச காங்கிரஸின் மாவட்டத் தலைவரான பிரதாப் சிங்கல், டெல்லி சென்று தனது சந்திப்புகளை முடித்து விட்டு திரும்பிய நிலையில், செய்தியாளர்களை சந்தித்தபோது, அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட இருக்கிறார். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.