டில்லி

காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி மட்டுமே என்றும் இருப்பார் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கடும் தோல்வி அடைந்தது.   அதை ஒட்டி கடந்த மாதம் 25 ஆம் தேதி அன்று செயற்குழு கூட்டத்தில் தமது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்தார்.  ஆனால் செயற்குழுவில் உள்ள பல மூத்த உறுப்பினர்கள் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனால் ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.  மூத்த தலைவர்கள் பலரும் அவரை சந்தித்து சமாதானம் செய்ய முயன்ற போதும் அவர் அவர்களை சந்திக்கவில்லை எனவும் தகவல்கள் வந்தன.   இந்நிலையில் அவருக்கு தலைமைப் பணிகளில் உதவ செயல் தலைவரை நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று காங்கிரசின் மூத்த தலைவர்களான ஏகே ஆண்டனி, அகமது படேல், குலாம் நபி ஆசாத், ப சிதம்பரம், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் ஒரு கூட்டத்தை நடத்தினர்.  இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியின் தலைமைக்கு மாற்று குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.   ஆனால் அதை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா மறுத்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம், “ராகுல் காந்தி மட்டுமே என்றும் காங்கிரஸ் கட்சி தலைவராக இருப்பார்.  அவர் தலைவர் பதவியில் இருந்து விலகுவாரா என்னும் கேள்விக்கு இடமில்லை.   நேற்று நடந்த மூத்த தலைவர்கள் கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து  விவாதிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.