மோடி குடும்பப்பெயர் குறித்து தேர்தல் கூட்டத்தில் அவதூறாக பேசியதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதனையடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்ததோடு அவர் குடியிருந்த அரசு பங்களாவையும் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ராகுல் காந்தியை தொடர் குற்றவாளி போல் சித்தரிக்க ஆளும் பாஜக அரசு முயல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்திக்கு டெல்லி குவாஜா நிஜாமுதீன் தர்கா அருகில் மறைந்த டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் குடும்பதுக்குச் சொந்தமான மூன்று படுக்கையறையுடன் கூடிய 1500 சதுர அடி வீட்டில் குடியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித் இதனை காலி செய்துவிட்டு தனது உறவினர் வீட்டுக்கு செல்லவுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முகவரியாக உள்ள ராகுல் காந்திக்கு டெல்லியில் புதிய முகவரி கிடைத்திருப்பதை அடுத்து டெல்லி அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.