டில்லி

டில்லியில் உள்ள ஒரு மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் ராகுல் காந்தி திரைப்படம் பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

நேற்று முன் தினம் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தில், “காங்கிரஸ் தலைவர் என்னும் முறையில் நான் 2019 ஆம் வருட மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்கிறேன். இந்த தோல்வியின் காரணமாக நான் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

தனது நான்கு பக்க ராஜினாமா கடிதத்தை அவர் தனது டிவிட்டரில் பகிர்ந்திருந்தார். ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை அவரது சகோதரியும் காங்கிரஸ் செயலருமான பிரியங்கா காந்தி புகழ்ந்திருந்தார். உலகில் வெகு சிலருக்கு மட்டுமே ராகுலைப் போல துணிச்சலாக நடக்க முடியும் எனவும் அவருக்கு தமது ஆழ்ந்த மரியாதையை அளிப்பதாகவும் டிவிட்டரில் பதிந்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி அதே தினம் இரவு டில்லியில் உள்ள பிவிஆர் சாணக்யா மல்டிப்ளெக்ஸ் திரை அரங்கில் அனுபவ் சின்ஹாவின் ஆர்ட்டிகிள் 15 என்னும் திரைப்படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்துள்ளார். அவர் திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ குறித்து இன்ஸ்டாகிராம் பயனாளிகள், “அவரை இவ்வாறு காண்பது நன்றாக உள்ளது. அவர் ஒரு அருமையான மற்றும் கவுரவமான மனிதர். இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் மக்களுடன் அமர்ந்து திரைப்படம் காண்பது மிகவும் அபூர்வமான காட்சி ஆகும். “ என புகழ்ந்துள்ளனர்.