டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாகாந்தி, ராகுல்காந்திக்குச் சொந்தமான ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்த விவகாரம் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மத்தியஅரசை கடுமையாக சாடியுள்ளார். இது எங்களை மிரட்டும் நடவடிக்கை என்று சாடியதுடன், பிரதமர் நரேந்திர மோடியை கண்டு காங்கிரஸ் கட்சி பயப்படாது என கூறினார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவரது மனுவில், ரூ. 2000 கோடி மதிப்புள்ள நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை சோனியாவும், ராகுலும் சட்டவிரோதமாக அபகரித்துக்கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அதாவது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் ரூ.50 லட்சத்துக்கு வாங்கி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தியது இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட பலரிடம் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் சமீபத்தில் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் ராகுல்காந்தியிடம் 5 நாட்கள் 50மணி நேரமும், கடந்த மாதம் (ஜூலை) சோனியா காந்தியிடம் 3 கட்டங்களாக 11 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது.
அமலாக்கத்துறையின் விசாரணையை கண்டித்த, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகம் உட்பட அதன் தொடர்புடைய 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து யங் இந்தியா நிறுவன அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அந்தக் கதவில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில், “அமலாக்கத்துறையின் முன் அனுமதி இன்றி இந்த அலுவலகத்தை யாரும் திறக்கக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதால், யங் இந்தியா நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சோனியா காந்தி வீட்டின் முன்பாக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சி தலைவர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்ட தோடு, அங்கும் தடுப்புகள் அமைத்து வழிகள் அடைக்கப்பட்டன. இந்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை மோடி அரசின் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது,
‘யங் இந்தியா’நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளது எங்களை மிரட்டும் முயற்சி. பிதமர் நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன்.
“உண்மையை தடுக்க முடியாது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நாடு, ஜனநாயகம், நல்லிணக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்க தொடர்ந்து பாடுபடுவேன்.இந்தியாவின் நலனுக்காக உழைக்க வேண்டும். அவர்கள் என்ன செய்தாலும் எனது வேலையைச் செய்வேன் என்றார்.
எங்கள் மீது சில அழுத்தம் கொடுப்பதன் மூலம் எங்களை அமைதிப்படுத்த முடியும் என்று பாஜக அரசு நினைக்கிறது. ஆனால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் இந்த நாட்டிற்காக என்ன செய்கிறார்கள். ஜனநாயகத்துக்கு எதிராக அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அதற்கு எதிராக நிற்போம். இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. ஜனநாயகம் முற்றிலுமாக காணாமல் போய்விட்ட நிலையில் 2,3 பணக்காரர்களுக்காக மட்டுமே சர்வாதிகார ஆட்சி நடக்கிறது.
இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து கூறிய காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “ஏஐசிசி தலைமையகத்திற்கு செல்லும் டெல்லி போலீசார் சாலையை மறிப்பது விதிவிலக்காக இல்லாமல் வழக்கமாகிவிட்டது! ஏன் அப்படி செய்தார்கள் என்பது மர்மமாக உள்ளது….” என்று தெரிவித்துள்ளார்.