மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவது போல் நகர்ப்புற வேலை உறுதி திட்டம் ஒன்றை ராஜஸ்தான் அரசு செயல்படுத்தியுள்ளது.

கிராமப்புற மக்களை விட ஒப்பீட்டளவில் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்கள் அதிகளவு வேலையின்றி இருப்பதாகவும் விலைவாசி உயர்வால் இவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அவர்களுக்கான தீர்வாக இந்திரா காந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரில் ஆண்டுக்கு 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் ஒன்றை கடந்த ஞாயிறன்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் துவக்கி வைத்தார்.

18 முதல் 60 வயது உள்ள நகர்ப்புற மக்களுக்கு ஆண்டொன்றுக்கு 100 நாள் வேலை வழங்க துவங்கப்பட்டிருக்கும் இந்த திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது “கிராமங்களில் உள்ள ஏழைகளுக்கு வேலை வழங்குவதற்காக 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு MGNREGA கொண்டு வந்தது போல், ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் நகரங்களில் அதிகரித்து வரும் வேலையின்மையை சமாளிக்க இந்திரா காந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் (Indira Gandhi Shahari Rozgar Yojana – IGSRY) கொண்டு வந்துள்ளது.

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து தீர்வளித்து வருகிறது.

நாடு முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 45 கோடிக்கும் அதிகமானோர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டனர்.

நகரங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் அளிக்கும் இத்திட்டம் ராஜஸ்தானில் மட்டுமின்றி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.